July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வியன்னா ‘இஸ்லாமிய தீவிரவாதத் தாக்குதல்’ தொடர்பில் 14 பேர் கைது

ஒஸ்ட்ரியாவின் தலைநகர் வியன்னாவில் ‘இஸ்லாமிய தீவிரவாதி’ என சந்தேகிக்கப்படும் ஆயுதாரி ஒருவர் நேற்று திங்கட்கிழமை மாலை நடத்திய தொடர் தாக்குதல்களில் நால்வர் கொல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து பெரும் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்த காவல்துறையினர், துப்பாக்கிதாரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 14 பேரை கைது செய்துள்ளனர்.

வியன்னாவில் துப்பாக்கிதாரி வசித்த பகுதிக்கு அருகில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக ஒஸ்ட்ரியாவின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

20 வயது ‘இஸ்லாமிய பயங்கரவாதியே’ இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறியுள்ள அதிகாரிகள், குறித்த இளைஞர் 2019 டிசம்பரில் சிறையிலிருந்து விடுதலையானவர் என தெரிவித்துள்ளனர்.

மத்திய வியன்னா பகுதியில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்திற்கு அருகே ஆரம்பமான துப்பாக்கி பிரயோகம் துப்பாக்கிதாரி சுட்டுக்கொல்லப்படும் வரை நீடித்தது.

நேற்று சம்பவம் நடந்த சந்தர்ப்பத்தில் பல துப்பாக்கிதாரிகள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றே காவல்துறை தகவல்கள் கூறின. எனினும் தனியொரு நபரே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகவே அதிகாரிகள் இப்போது கருதுகின்றனர்.

எனினும் மற்றொரு துப்பாக்கிதாரியையும் பார்த்ததாக சிலர் தெரிவித்திருந்த நிலையில், இரண்டாவது நபரும் இந்தத் தாக்குதலுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற வாதத்தை  ஒஸ்ட்ரியாவின் உள்துறை அமைச்சர் மறுதலிக்கவில்லை.

சிரியா சென்று ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைய முயற்சித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்து, பின்னர் 2019 இல் விடுதலையானவரே  தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.