காஸாவில் உள்ள அஹ்லி அரபு மருத்துவமனை மீது செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் நோயாளர்கள் என 500 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு காஸாவிற்கு இடம்பெயர முடியாத பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த நாட்களில் இந்த மருத்துவமனையை அண்மித்து தங்கியுள்ளனர்.
இவ்வாறான நிலைமயில் அந்த மருத்துவமனை மீது விமான தாக்குதல் நடத்தப்பட்டள்ளது.
இஸ்ரேலே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இது யுத்தக் குற்றமாகும் என்றும் ஹமாஸ் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதேவேளை நோயாளர்கள் மற்றும் போரில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியன தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும் இந்தத் தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்றும், வேறு அமைப்புகள் தவறுதலாக இதனை நடத்தியிருக்கலாம் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.