ஈராக் நினவா மாநிலத்தின் அல்-ஹம்டனியா பகுதியில் திருமண மண்டபமொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் குறைந்தது 100 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டோர் எரிகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாக்தாத் நகரத்தில் இருந்து சுமார் 335 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல்-ஹம்டனியா பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். அங்குள்ள மண்டபமொன்றில் 27ஆம் திகதி நடைபெற்ற கிறிஸ்தவ திருமண நிகழ்வில் எதிர்பாராத விதமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
சில நிமிடங்களில் மளமளவென மண்டபம் முழுவதும் தீ பரவியதால் அங்கிருந்த மக்களால் வெளியேற முடியவில்லை. இந்த விபத்தில் சுமார் 100 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் சம்பவ இடத்தில் வாணவேடிக்கையால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குமாறும் ஈராக் பிரதமர் முஹம்மது ஷியா அல்-சுடானி உத்தரவிட்டுள்ளார்.