July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்?: விறுவிறுப்புடன் நடக்கும் வாக்களிப்பு

டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பைடன்

தங்களை அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஆளப்போகும் ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தலில் அமெரிக்கர்கள் இன்று வாக்களிக்கின்றார்கள்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் – ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் ஆகியோர் இம்முறை களத்தில் உள்ளனர்.

துணை ஜனாதிபதி வேட்பாளர்களாக டொனால்ட் ட்ரம்ப் அணியில் மைக் பென்ஸ், ஜோ பைடன் அணியில் இந்தியத் தமிழ் வம்சாவளிப் பெண்ணான கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிருகின்றனர்.

சுமார் 100 மில்லியன் பேர் (10 கோடிப் பேர் ) முன்கூட்டியே வாக்களித்து விட்ட நிலையில், கடந்த 100 ஆண்டுகளில் இதுவே அதிக வாக்களிப்பு வீதம் பதிவான தேர்தலாக அமெரிக்க வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளது. 2016 இல்   ஒட்டுமொத்தமாக அளிக்கப்பட்ட 139 மில்லியன் வாக்குகளே இதுவரையான சாதனையாக பார்க்கப்படுகின்றது.

உள்ளூர் கருத்துக் கணிப்புகளின் பிரகாரம் ஜோ பைடன் முன்னணியில் இருந்தாலும், சில மாநிலங்களில் நிலவும் கடுமையான போட்டி காரணமாக இறுதி முடிவு எப்படி அமையும் என்பதை உறுதியாக ஊகிக்க முடியாது.

தேர்தல் முறை

குறைந்தது 270 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெள்ளை மாளிகையில் இடம்பிடிப்பார்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்த வரையில், மாநிலவாரியாகவே வாக்களிப்பு இடம்பெற்று முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன.

50 மாநிலங்களிலும் உள்ள மக்கள் தாம் விரும்பும் வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிக்கும் தேர்தல் கல்லூரி உறுப்பினர்களுக்கே வாக்களிப்பார்கள்.

குறித்த உறுப்பினர்கள் பின்னர் தாம் ஆதரிக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள். குறைந்தது 270 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக வெற்றி பெறுவார்.

ஒவ்வொரு மாநிலமும் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் கொண்டுள்ள உறுப்பினர்களுக்கு சமனான எண்ணிக்கையில் தேர்தல் கல்லூரி உறுப்பினர்களை கொண்டுள்ளன.

முழு நாட்டிலும் ஒட்டுமொத்தமாக அதிக வாக்குகளைப் பெறுபவர் கூட இந்தத் தேர்தல் முறையால், தோல்வியடையும் நிலை ஏற்படலாம். 2016-ம் ஆண்டில் ஹிலரி கிளிண்டனுக்கு இந்த நிலையே ஏற்பட்டது; அதிக மக்களின் வாக்குகளை வென்ற போதிலும், தேவையான அளவு தேர்தல் கல்லூரி உறுப்பினர்களை அவரால் வெல்ல முடியவில்லை.

முக்கிய மாநிலங்கள்

கடந்த கால முடிவுகளுடன் ஒப்பிடும் போது, விஸ்கோன்ஸின், மிச்சிகன், ஓஹியோ, பென்ஸில்வேனியா, நோர்த் கரோலினா, ஜோர்ஜியா, புளோரிடா, அரிஸோனா உள்ளிட்ட சில மாநிலங்களின் முடிவுகள் இம்முறை தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கலாம்.

2016-ம் ஆண்டு தேர்தலில் இந்த மாநிலங்களில் ஹிலரி கிளிண்டனுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருந்தார்.

மைக் பென்ஸ்

அந்த மாநிலங்களில் வெற்றியைத் தக்க வைப்பது ட்ரம்பின் வெற்றிக்கு மிக அவசியமாகும்.

அதேபோல, பெரும்பாலும் ஜனநாயகக் கட்சி ஆதரவுத் தளங்களாக பார்க்கப்பட்ட விஸ்கோன்ஸின், பென்ஸில்வேனியா, மிச்சிகன் ஆகிய மாநிலங்களை டொனால்ட் ட்ரம்ப் கடந்த தடவை தன் பக்கம் சாய்த்திருந்தார்.

இம்முறை மிச்சிகனில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறியிருந்தன. இந்த மாநிலத்தை இழக்க நேரிட்டால் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாகும் பைடனின் கனவு நிறைவேறாமல் போகலாம் என்பது அரசியல் அவதானிகளின் கருத்து.

அத்தோடு புளொரிடா, அரிஸொனா, நோர்த் கரோலினா ஆகிய தென்னக மாநிலங்களும் முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.

ஜனாதிபதித் தேர்தல்களில் புளோரிடாவில் எப்போதும் போட்டி கடுமையாக இருக்கும். 1964-இலிருந்து, 1992-ஐ தவிர, எல்லாத் தேர்தல்களிலும் புளொரிடா மாநிலத்தை வென்றவரே வெள்ளை மாளிகைக்குச் சென்றுள்ளார்.

 

முடிவுகள் எப்போது?

கமலா ஹாரிஸ்

எல்லா மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிய பல நாட்கள் ஆகலாம். ஆனால், யார் வெற்றி பெற்றுள்ளார் என்பது வாக்களிப்பு முடிந்து மறுநாள் அதிகாலையிலேயே பெரும்பாலும் தெரிந்துவிடும்.

2016, இல் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கெல்லாம் டொனால்ட் ட்ரம்ப் தனது வெற்றி உரையை ஆற்றிவிட்டார்.

ஆனால், வரலாறு காணாத அளவுக்கு முன்கூட்டியே பதிவாகியுள்ள அதிக தபால் வாக்குகள் காரணமாக இம்முறை முடிவுகளுக்கு பல நாட்கள் ஆகலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

2000-ஆம் ஆண்டில் ஒரு மாதம் கழித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பொன்றின் பின்னரே வெற்றியாளர் யார் என்பது உறுதியானமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1992- ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதவியில் இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் இரண்டாவது தவணைக்கான தேர்தலில் தோற்றதில்லை. அந்த வரலாற்றை டொனால்ட் ட்ரம்ப் தக்கவைப்பாரா அல்லது அதை ஜோ பைடன் தகர்ப்பாரா என்பதை அமெரிக்கர்கள் இன்று தீர்மானித்துவிடுவார்கள்.