November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுனாமி போல வெள்ளம் – ஆயிரக்கணக்கில் பலி: லிபியாவில் பேரவலம்!

லிபியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 18,000 பேர் முதல் 20,000 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டேர்னாவின் தெற்கே உள்ள அணைகளில் ஒன்று உடைந்ததால் பெரும் சுனாமி போல வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஆயிரக் கணக்கானோர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

இதுவரையில் 10,000 பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை 18,000 முதல் 20,000 வரை உயரலாம் என்று லிபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்படுகின்ற போதும், அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று மீட்பு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமையன்று டேர்னா நகரில் டேனியல் புயல் தாக்கியபோது 2 அணைகளும் 4 பாலங்களும் இடிந்து நகரின் பெரும்பகுதி நீரில் மூழ்கியதாக லிபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை லிபியாவின் அரசியல் சூழ்நிலையால் மீட்பு முயற்சிகள் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் எகிப்து, அமெரிக்கா, ஜெர்மனி, ஈரான், இத்தாலி, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உதவிகளை அனுப்புவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.