January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டிரம்ப் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு: உறுதியானால் நீண்ட சிறைத் தண்டனை!

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக நான்கு பிரிவுகளின் கீழ் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்க மத்திய நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

எதிர்த் தரப்பு ஜனாதிபதி வேட்பாளரான ஜோ பைடனின் வெற்றியை தடுப்பதற்காக பல்வேறு சூழ்ச்சிகளில் டிரம்ப் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்து 6 பேருடன் இணைந்து தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக சதி செய்தமை, சாட்சிகளைக் குழப்பியமை, அமெரிக்க பிரஜைகளின் உரிமைகளுக்கு எதிராக சதி செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டிரம்ப் மீதான இந்த குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகையானது 2021 ஜனவரியில் ​மேற்கொள்ளப்பட்ட கெப்பிடல் கலவரம் சார்ந்த விடயங்களின் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானால் பல வருடங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மீளவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ள டொனால்ட் ட்ரம்ப் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

இதேவேளை, இரகசிய அரச ஆவணங்களைத் தவறாகக் கையாண்டமை, நடிகை ஒருவருக்கு பணம் வழங்கியமை உள்ளிட்ட 2 குற்றச்சாட்டுகளை அவர் ஏற்கனவே எதிர்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.