November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துருக்கி நிலநடுக்கம்: கட்டட ஒப்பந்தக்காரர்கள் பலர் கைது!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற நிலநடுக்கங்களில் உயரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்னும் கட்டட இடிபாடுகளுக்குள் பலர் இருக்கலாம் என்றும், இதனால் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிலநடுக்கங்களில் துருக்கி மற்றும் சிரியாவில் பெருமளவிலான அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள் இடிந்து விழுந்ததுடன், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்த ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து மீட்புக் குழுவினர் காயங்களுடன் பலரை மீட்டுள்ளனர். அத்துடன் இடிபாடுகளுக்குள் இருந்து இதுவரையில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 நாட்களாக அங்கு மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றது. இன்னும் பல இடிந்த கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்படவில்லை.

இந்நிலையில் இடிந்து விழுந்த கட்டடங்கள் தொடர்பில் துருக்கி அரசாங்கம் சில தீர்மானங்களை எடுத்துள்ளது. அந்தக் கட்டடங்கள் இடிந்து விழுந்ததற்கு அதன் மோசமான கட்டுமானம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால் 131 கட்டிட ஒப்பந்ததாரர்களை துருக்கி அரசு கைது செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.