துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது.
மூன்றாவது நாளாகவும் அங்கு மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளுக்கு முன்னுரிமையளித்து மீட்புக் குழுவினர் தொடர்ச்சியாக இரவு பகலாக மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் துருக்கியில் மருத்துவமனையொன்றுக்கு முன்னால் பெருமளவான சடலங்கள் உறவினர்களால் அடையாளம் காண்பதற்காக வரிசையாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
துருக்கியிலேயே அதிகளவானோர் உயிரிழந்துள்ளதாகவும் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டட இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் இருப்பதாகவும், சில இடங்களில் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் பலர் மீட்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சில இடங்களில் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சிக்கியுள்ளோரின் குரல் சத்தங்கள் கேட்பதாகவும், அவர்களை மீட்பதற்காக மீட்புக் குழுவினர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், துருக்கியின் 10 மாகாணங்களில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் அறிவித்துள்ளார்.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மேலும் பல தடவை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளன. இதன்போது அங்கு உயரமான கட்டடங்கள் உடைந்து விழுந்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் 2 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.