பாகிஸ்தான், பெஷாவரில் பள்ளிவாசலொன்றில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குண்டு வெடிப்பின் போது அங்கு பலர் தொழுகையில் ஈடுபட்டிருந்தாக கூறப்படுகின்றது.
பொலிஸ் குடியிருப்புகளை அதிகளவில் கொண்ட அந்தப் பகுதியில் வழமைப் போன்று திங்கட்கிழமை நண்பகல் பலர் பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது அங்கு குண்டு வெடித்துள்ளது.
இதன்போது பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும், இவர்களில் 25 பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளதாகவும் பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள பாதுகாப்பு தரப்பினர் மேலும் குண்டுதாரிகள் அங்கு இருக்கின்றனரா என்று தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
இது பயங்கரவாத குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று கூறப்பபடுகின்றது.
எனினும் சம்பவத்திற்கு இதுவரையில் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.