
பிரேசிலில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்ததை தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் ஜனாதிபதி மாளிகை, உயர்நீதிமன்ற வளாகம் பாராளுமன்றம் ஆகியவற்றுக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த தேர்தலில் அதிபர் போல்சனேரோ குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததுடன், எதிராக போட்டியிட்ட முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார்.
இதையடுத்து, லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரேசிலின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மிகக்குறைந்த வாக்கு வித்தியாசமே இருந்த நிலையில் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் போராட்டங்கள் தற்போது வன்முறையாக மாறியுள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதேவேளை பிரேசிலில் ஏற்பட்டுள்ள வன்முறை நிலைமையை அமெரிக்க அதிபர் கண்டித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ”பிரேசிலில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலையும், அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றுவதையும் நான் கண்டிக்கிறேன். பிரேசிலின் ஜனநாயக நிறுவனங்களுக்கு எங்கள் முழு ஆதரவு உள்ளது. அவர்களின் விருப்பத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.