மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அப்துல்லா யாமீனுக்கு எதிரான இலஞ்சம் மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கிலேயே அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் அவருக்கு சிறைத் தண்டனையுடன், 5 மில்லியன் அமெரிக்க டொலா் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
2013 – 2018 காலப்பகுதியில் ஜனாதிபதியாக பதவி வகித்த அப்துல்லா யாமீன் அரசுக்கு சொந்தமான தீவு ஒன்றை குத்தகைக்கு வழங்க இலஞ்சம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை குற்றம் மற்றும் இலஞ்சம் பெற்ற குற்றம் ஆகியவற்றுக்காக 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவருக்கு எதிரான ஊழல் மோசடி வழக்கொன்றில் 2019 ஆம் ஆண்டில் 5 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டு முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பை இரத்துச் செய்து அவரை விடுதலை செய்திருந்தது.