October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தொற்றுநோய் நிபுணர் அன்டனி பௌசியை பதவி நீக்குவேன்- டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டின் தலைசிறந்த தொற்றுநோய் நிபுணரும் அமெரிக்காவின் தொற்றுநோய் ஒவ்வாமை நோய்களிற்கான நிறுவகத்தின் இயக்குநருமான அன்டனி பௌசியை அந்த பதவியிலிருந்து நீக்கப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலிற்கு 24 மணிநேரத்திற்கு முன்னர் புளோரிடாவில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பௌசியை பதவி நீக்குங்கள் என்ற அவரது ஆதரவாளர்களின் கோஷங்களுக்கு மத்தியில் உரையாற்றிய டிரம்ப், தேர்தலின் பின்னர் சிறிதுகாலம் வரை எனக்கு கால அவகாசத்தை வழங்குங்கள். நான் உங்கள் ஆலோசனையை பாராட்டுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

அவர் நல்லவர். ஆனால் பல விடயங்களில் தவறிழைத்துவிட்டார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அன்டனி பௌசி உலகின் தலைசிறந்த தொற்றுநோய் நிபுணர் என்பதுடன், ஆறு அமெரிக்க ஜனாதிபதிகளின் கீழ் மூன்று தசாப்தங்களுக்கு மேல் அமெரிக்காவின் ஒவ்வாமை தொற்று நோய்களிற்கான நிருவகத்தின் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

டிரம்பின் கொரோனா வைரசிற்கு எதிரான செயலணியில் மிக முக்கியமான நபராக காணப்பட்ட பௌசி, கொரோனா வைரசின் தீவிர தன்மை குறித்து ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுவரும் கருத்துகளிற்கு முரணான கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார்.

இதேவேளை டொனால்ட் டிரம்பின் கருத்திற்கு பதில் கருத்தினை வெளியிட்டுள்ள ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், அன்டனி பௌசியை போன்ற ஒருவரை செவிமடுக்கும் ஜனாதிபதியொருவர் அமெரிக்காவிற்கு தேவை என குறிப்பிட்டுள்ளார்.