July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியா தலைமையிலான ‘மலபார்’ கூட்டுப் போர்ப் பயிற்சியில் இணையும் அவுஸ்திரேலியா

photo: Indian Navy

இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ‘குவாட்’ என்ற கூட்டு போர்ப் பயிற்சியின் அங்கமான “மலபார் 2020” கூட்டு கடற்படை ஒத்திகையின் முதல் கட்டம் நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ள இந்த ஒத்திகையில் இந்திய அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஜோன் எஸ். மக்கெய்ன் என்ற ஏவுகணை-அழிப்புக் கப்பல், அவுஸ்திரேலியாவின் எச்எச்ஏஎஸ் பலராட் எனப்படும் 60 ஹெலிக்காப்டர்களை கொண்டுள்ள நீண்டதூர கடற்படை கப்பல், ஜப்பானின் ஒனாமி என்ற போர்க்கப்பல் போன்ற கப்பல்கள் ஒத்திகையில் ஈடுபடவுள்ளன.

இந்திய கடற்படை தனது ரோந்துக் கப்பல் சிந்துராஜ் என்ற நீர்மூழ்கியையும்,  நீண்டதூர கடலோர கண்காணிப்பு விமானமான பி81, டொரினர் என்ற கடலோர ரோந்து படகு போன்றவற்றையும் ஒத்திகையில் ஈடுபடுத்தவுள்ளது.

லடாக் எல்லையில் இந்தியா- சீனா இடையில் முறுகல் காணப்படுகின்ற நிலையில் இந்த ஒத்திகை ஆரம்பமாகவுள்ளது.

சீனாவின் எதிர்ப்பு

1992ல் முதன் முதலாக இந்தியாவும் அமெரிக்காவும் இந்தியப் பெருங்கடலில் கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்த மலபார் போர்ப் பயிற்சியில் 2015-இல் ஜப்பானும் இணைந்து கொண்டது.

கடந்த ஆண்டு ஜப்பான் கடலில் நடந்த இந்தப் பயிற்சி, இந்த ஆண்டு முதற்கட்டமாக வங்காள விரிகுடாவின் விசாகப்பட்டினம் கடற்பரப்பில் நவம்பர் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இரண்டாவது கட்டப் பயிற்சி அரபிக் கடலில் நவம்பர் 17 முதல் 20 திகதி வரையில் நடைபெறவுள்ளது. மலபார் போர் பயிற்சியில் இந்தாண்டு அவுஸ்திரேலியா கடற்படையும் இணைகின்றமை சிறப்பம்சமாகும்.

2007-ம் ஆண்டில் கடைசியாக அவுஸ்திரேலியாவும் சிங்கப்பூரும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, சீனாவிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருந்தது. அதன் பின்னர் நடந்த பயிற்சிகளில் இந்தியாவும் அமெரிக்காவும் ஜப்பானும் மட்டுமே கலந்துகொண்டிருந்தன.

இம்முறை அவுஸ்திரேலியாவையும் இணைத்துக்கொள்ள இந்தியா முன்வந்துள்ளமை முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகின்றது.

இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை பராமரித்து, சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கு வழிவகை செய்யும் நோக்குடன் ‘குவாட்’ அமைப்பு உருவானமை குறிப்பிடத்தக்கது.