தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் நடைபெற்ற ஹலோவீன் திருவிழாவின்போது சன நெரிசலில் சிக்கி 151பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறலுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்ககப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆண்டு தோறும் ஒக்டோபர் மாத கடைசியில் நடைபெறும் இந்த திருவிழாவில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இடோவான் மாவட்டத்திற்கு வருகை தருவார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொவிட் கட்டுபாடுகள் காரணமாக அந்தத் திருவிழா நடைபெறவில்லை.
இவ்வாறான நிலைமையில் இந்த வருடம் திருவிழா நடைபெற்ற போது, அதில் பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர். பேய் வேடமணிந்த தென் கொரிய மக்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இவ்வேளையில்ஒரு குறுகிய தெருவில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்த நிலையில், முன்னோக்கி தள்ளப்பட்ட பெரிய கும்பலால் திடீர் நெரிசல் ஏற்பட்டதையடுத்து பலர் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகியுள்ளனர்.
அப்போது மீட்புக்குழுவினர் மூச்சுத் திணறலுக்கு உள்ளானவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் 151 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து தென் கொரிய அதிபர் யூன் சூக் யோல் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் தேசிய துக்க தினத்தை பிரகடனம் செய்யவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதேவேளை இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுள் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டி பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.