இரானில் வசித்த ”உலகிலேயே அழுக்கான மனிதர்” என்று கூறப்பட்ட 94 வயது நபர் மரணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
50 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருந்த இவர், குளித்து சில மாதங்களில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேஜ்ஹா எனும் கிராமத்தில் செங்கற்கள் மற்றும் மண்ணால் அமைக்கப்பட்ட சிறிய வீட்டில் தனிமையில் வசித்து வந்த அமோ ஹாஜி என்றழைக்கப்படும் இவர், குளிப்பது தனது உடல்நலத்தை பாதிக்கும் என்று கருதியதால், தொடர்ந்தும் குளிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.
இதனால் இவரை உலகிலேயே அழுக்கான மனிதர் என்று சர்வதேச ஊடகங்கள் கூறிவந்தன.
இந்நிலையில் பிரதேசவாசிகளின் அழுத்தம் காரணமாக சில மாதங்களுக்கு குளித்த அமோ ஹாஜி, உடல் நலக் குறைவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இவர் குளிக்காமல் இருந்ததால் அவரது உடல் முழுவதும் கரிய அழுக்கு படிந்திருந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன.
இவர், புகை பிடிப்பதை மிகவும் விரும்புபவராக இருந்தவர் என்றும், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிகரெட்டுகளை புகைக்கும் பழக்கம் கொண்டவர் என்றும் கூறப்படுகின்றது.