பிரிட்டனின் 57ஆவது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்கினால் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமராக இவருக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்டிருந்த லிஸ் ட்ரஸ், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 45 நாட்களில் தனது பதவியை கடந்த வியாழக்கிழமை இராஜினாமா செய்தார்.
அதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தெரிவு செய்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது கன்சர்வேட்டிவ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட தீர்மானித்திருந்த பென்னி மார்டன்ட் போட்டியில் இருந்து விலகியதால், ரிஷி சுனக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், ரிஷி சுனக்கை ஆட்சி அமைக்க மன்னர் மூன்றாம் சார்லஸ் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்த ரிஷி சுனக், பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்படி இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இந்த வருடத்திற்குள் பிரிட்டனில் தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது பிரதமராக கடமைகளை ஆரம்பித்ததுடன், புதிய அமைச்சரவையை நியமித்தார்.
பிரதமராக தான் பதவியேற்ற பின்னர் உரையாற்றிய ரிஷி சுனக், ”நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்றே முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் முயற்சி செய்தார். மாற்றத்துக்கான அவருடைய முயற்சிகளை பாராட்டுகிறேன். ஆனால் சிலதவறுகளால் மோசமான விளைவுகள் ஏற்பட்டன. அந்த தவறுகளை நான் சரி செய்வேன்” என்று கூறியுள்ளார்.