ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள காபூல் பல்கலைகழகத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 19 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 22 பேர் காயமடந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் கூடியிருந்தபோது, அங்கு நுழைந்த ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் ஆயுததாரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். ஆயுததாரிகள் மூவர் கொல்லப்பட்டவுடன் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் பலியான மாணவர்களில் 10 பெண்களும் அடங்குவதாக ஆப்கன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான இந்தக் கல்வி நிறுவனத்தில் நடக்கவிருந்த ஈரானிய புத்தகக் கண்காட்சிக்கு ஆப்கானுக்கான ஈரானிய தூதர், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் வருகை தரவிருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தாலிபன் அமைப்பு கூறியுள்ளது.