May 24, 2025 14:29:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிறிஸ்தவ மதகுரு மீது பிரான்சில் துப்பாக்கி பிரயோகம்

பிரான்சின் லியோன் நகரில் கிறிஸ்தவ மதகுரு ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பிரான்ஸ் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

நீஸ் தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின்னரும் ஆசிரியர் தலைதுண்டிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்களின் பின்னரும இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் பிரான்சில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கிரேக்கத்தினை சேர்ந்த 52 வயது மதகுரு தேவாலயத்தின் கதவுகளை மூடிக்கொண்டிருந்த வேளை இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிறீஸ் நாட்டைச் சேர்ந்த கே. நிக்கோலா என்ற 52 வயதுடைய பங்குத் தந்தை உயிராபத்தான கட்டத்தில் அவ்விடத்தில் வைத்தே அவசர முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கைத்துப்பாக்கியுடன் தப்பியோடிய தாக்குதலாளியை பொலிஸார் வலைவிரித்து தேடிவருகின்றனர்.

பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்று இது தனிப்பட்ட தகராறின் காரணமாக இடம்பெற்ற சம்பவம் என தெரிவித்துள்ள அதேவேளை, பத்திரிகையாளர்களை இது பயங்கரவாத தாக்குதல் என்ற முடிவிற்கு வரவேண்டாம் என கோரியுள்ளது.

இதேவேளை நபர் ஒருவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்திற்குள்ளான மதகுரு உயிருக்காக போராடி வருகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.