January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பதவியை இராஜினாமா செய்யும் பிரிட்டன் பிரதமர்!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கும் அவரின் அரசாங்கத்திற்கும் எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி கட்சித் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதுடன், புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பிரதமர் பதவியில் இருந்தும் தான் விலகுவேன் என்று இன்று அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் பிரிட்டனில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் போரிஸ் ஜோன்சனின் அறிவிப்புகளும் மக்களை மிகுந்த இன்னல்களுக்குள்ளாக்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

இதேவேளை பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த பிரதமரின் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கிரிஷ் பின்சருக்கு துணை தலைமை கொறடா பதவி வழங்கப்பட்டமையும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை மேலும் பல விடயங்களில் பிரதமர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவரின் அரசாங்கம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது.

இதன் காரணமாக அவரது அமைச்சரவையில் இருந்த நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் ஆகியோர் ஜுலை 6 ஆம் திகதி பதவி விலகினர். தொடர்ந்து பல்வேறு அமைச்சர்களும் போரிஸ் ஜோன்ஸனுக்கு எதிராகத் திரும்பினர்.

இந்நிலையில் இன்றைய தினத்தில் விசேட அறிவித்தலை வெளியிட்ட போரிஸ் ஜோன்சன், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார்.