January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் 19: இங்கிலாந்து 4 வாரங்களுக்கு முடக்கப்படுகின்றது!

லண்டன் நகரம் முடக்கம் - ஏப்ரல் 2020
லண்டன் நகரம், இங்கிலாந்து (ஏப்ரல் 2020)

இங்கிலாந்தில் தீவிரமடைந்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேசிய அளவிலான இரண்டாவது முடக்கத்தை அரசு அறிவித்துள்ளது.

புதிய அறிவித்தலின் பிரகாரம், இங்கிலாந்தில் மதுபான விடுதிகள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற வணிக நிலையங்கள் என்பன வரும் வியாழக்கிழமை முதல் அடுத்துவரும் நான்கு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும்.

ஆனால், கடந்த தடவை அறிவிக்கப்பட்ட முடக்கம் போலல்லாது இம்முறை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பன இயங்க முடியும்.

“தேசிய சுகாதார சேவை நிலைகுலைவதை தடுப்பதற்காக” இந்த முடக்கல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.

இம்முறை கிறிஸ்துமஸ் பண்டிகை ‘மிகவும் வித்தியாசமாக’ இருக்கலாம் என்று கூறியுள்ள பிரதமர், இப்போதே நடவடிக்கை எடுப்பதன் மூலம் குடும்பங்கள் ஒன்றிணையும் வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக இங்கிலாந்து உட்பட பிரிட்டனின் பல பாகங்களிலும் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது.

இங்கிலாந்தில் வைரஸ் பரவலின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப பிரதேசங்கள் தனித்தனி வலயங்களாக பிரிக்கப்பட்டு சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேசிய அளவிலான புதிய முடக்கம் டிசம்பர் 2-ம் திகதி தளர்த்தப்பட்டதன் பின்னர், இங்கிலாந்து மீண்டும் பிரதேசவாரியான கட்டுப்பாட்டு முறைக்கு சென்றுவிடும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பிரிட்டனில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தையும் தாண்டியுள்ளது; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆயிரத்துக்கும் அதிகம் என அதிகாரபூர்வ தரவுகள் கூறுகின்றன.