மியன்மாரின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூகி மீதான ஊழல் வழக்கில் அவர் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி அவருக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அவருக்கு வேறு வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊழல் வழக்கிலும் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பபட்டுள்ளது.
மியான்மரில் 2021 பெப்ரவரியில் அந்நாட்டு இராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
அதை தொடர்ந்து, மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரச அதிகாரிகளை இராணுவம் கைது செய்தது.
இதன் பின்னர் வீட்டுச் சிறையில் ஆங் சான் சூகி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் மீது தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணையின்படி கடந்த டிசம்பர் மாதம் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை மியான்மரில் உள்ள ஜூண்டா நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக மேலும் மூன்று குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்ததுடன், அதன் தீர்ப்பு கடந்த ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அவருக்கு நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு எதிரான ஊழல் வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட போது, அதிலும் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 5 வருட சிறைத் தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.