November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தெரிவானார்!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் தெரிவாகியுள்ளார்.

இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, அந்நாட்டின் புதிய பிரதமராக முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ‌ஷபாஸ் ஷெரீப்பை தெரிவு செய்வதற்கு பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் இம்ரான்கான் அரசாங்கத்தின் நிர்வாக திறமையின்மையே காரணம் என்று கூறி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.

அதன் மீதான வாக்கெடுப்பு சனிக்கிழமை பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், அதில் இம்ரான் கான் அரசாங்கம் தோல்வியடைந்தது.

இதனையடுத்து பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டதுடன், அவர் தலைமையிலான அரசாங்கமும் கவிழ்ந்தது.

இந்நிலையில் புதிய பிரதமர் தெரிவுக்காக பாராளுமன்றம் கூடிய போது, ஷபாஸ் ஷெரீப்பை தெரிவு செய்வதற்கு எதிர்க்கட்சியினர் நடவடிக்கை எடுத்தனர்.

லாகூரில் பஞ்சாபி மொழி பேசும் காஷ்மீர் குடும்பத்தில் 1951 ஆம் ஆண்டு ‌ஷபாஸ் ஷெரீப் பிறந்தார். அவரது தந்தை முகமது ஷெரீப் தொழில் அதிபர் ஆவார்.

இதேவேளை நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது 1997 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாகாண முதலமைச்சராக ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் 1999 ஆம் ஆண்டு ராணுவ தளபதி பர்வீஷ் மு‌ஷரப் தலைமையிலான ராணுவ புரட்சியால் நவாஸ் ஷெரீப் அரசு கலைக்கப்பட்டாதால் ‌ஷபாஸ் ஷெரீப் தனது குடும்பத்தினருடன் சவூதி அரேபியாவில் 8 ஆண்டுகள் வசித்தார். பின்னர் 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார்.

இதேவேளை ‘பனாமா பேப்பர்’ வழக்கில் நவாஸ் ஷெரீப் நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து பி.எம்.எல்.-என் கட்சித்தலைவராக ‌ஷவாஸ் ஷெரீப் நியமிக்கப்பட்டார்.

அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானார்.