January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுக்ரைனின் கீவ் நகர வீதியில் பிரிட்டன் பிரதமர்!

யுக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன், அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துள்ளார்.

யுக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது ரஷ்யாவின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் பிரிட்டன் பிரதமர் பார்வையிட்டுள்ளார்.

யுக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒன்றரை மாதங்கள் கடந்துள்ளன. இந்த காலப்பகுதியில் ரஷ்ய படையினர் வான் வழியில் நடத்திய தாக்குதல்களில் கீவ் நகர் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது வான்வழியில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தக்க வைத்திருக்கும் முயற்சியில் ரஷ்ய படையினர் தோல்வியடைந்த நிலையில், அவர்கள் தற்போது தமது கவனத்தை இப்போது கிழக்கு யுக்ரைன் மீது திருப்பியுள்ளனர்.

இதேவேளை போரினால் பாதிக்கப்பட்டுள்ள யுக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன், சனிக்கிழமை யுக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளார். கீவ் நகரில் யுக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து, நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது போரிஸ் ஜோன்சன், கீவ் நகரில் வீதிகளில் பயணித்து நிலைமைகளை பார்வையிட்டார். இவ்வேளையில் அங்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.