பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, அந்நாட்டின் புதிய பிரதமராக முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரீப் தெரிவாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஷபாஸ் ஷெரீப்பை பிரதமராக நியமிக்க எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், இதன்படி அவர் திங்கட்கிழமை பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் இம்ரான்கான் அரசாங்கத்தின் நிர்வாக திறமையின்மையே காரணம் என்று கூறி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.
ஏற்கனவே கடந்த 3 ஆம் திகதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அன்று, சட்டசபையை நடத்திய துணை சபாநாயகர், தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்தார்.
பின்னர் பிரதமரின் ஆலோசனைக்கமைய பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.
இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் , பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அதிரடியாக தீர்ப்பு அளித்தது. மேலும் பாராளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு, மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அறிவித்தது.
இதன்படி சனிக்கிழமை இரவு நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், அதில் இம்ரான் கான் அரசாங்கம் தோல்வியடைந்தது.
இதன்படி இம்ரான்கான் அரசாங்கம் கவிழ்ந்ததுடன், பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமர் நாளை தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இதற்காக பாராளுமன்றம் நாளை மீண்டும் கூடுகிறது.