November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது!

எதிர்க்கட்சிகளினால் தனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தோல்வியடைந்துள்ளார்.

பாகிஸ்தான் பாராளுமன்றில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதன்போது, 342 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றில், தீர்மானத்திற்கு ஆதரவாக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இந்த நிலையில், இம்ரான் கான் தொடர்பில் அதிருப்தியில் செயற்பட்ட ஆளும்தரப்பு உறுப்பினர்கள் சிலர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதன்படி, பிரதமர் இம்ரான் கான் வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார்.

இதற்கமைய, புதிய பிரதமர் விரைவில் நியமிக்கப்படுவார். அதற்கான வாக்கெடுப்பு திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை தொடர்ந்து, பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருந்தன.

இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும், இதனால் இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இரத்துச் செய்வதாகவும் ஏப்ரல் 3 ஆம் திகதி துணை சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தை கலைத்து பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இதனை எதிர்த்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று நடைபெற்ற விசாரணையின் போது அதிபர் ஆரிப் ஆல்வியின் உத்தரவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இரத்து செய்தது.

பிரதமர் இம்ரான் கான் அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் என்றும், அதனால் பாராளுமன்ற சபைகளை கலைக்குமாறு அதிபர் ஆரிப் அல்விக்கு அவர் அறிவுறுத்த முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

மேலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் இரத்துச் செய்யப்பட்டது, அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இவ்வாறான நிலைமையிலேயே இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு சனிக்கிழமை நடத்தப்பட்டது.