November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!

பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று, பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அதிபர் ஆரிப் ஆல்வி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, துணை சபாநாயகரால் இரத்துச் செய்யப்பட்டதை தொடர்ந்தே பாராளுமன்றத்தை கலைப்பதற்கு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி எழுந்துள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கானை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்று பாராளுமன்றம் கூடிய போது, அந்த பிரேரணை அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அதனை இரத்துச் செய்வதாகவும் துணை சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிபர் ஆரிப் ஆல்விக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்த பிரதமர் இம்ரான் கான், ”நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான வெளிநாட்டு சதியாகும். நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிக்கும் முடிவு சரியானதே. எனினும் தற்போதைய நிலைமையில் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்ற அதிபர், பாராளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ளார்.

இதன்படி இன்னும் 90 நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.