பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு எதிராக தென்னாசிய நாடுகள் பலவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
பிரான்ஸ் ஜனாதிபதியின் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான கருத்துக்கள் குறித்த எதிர்ப்பை வெளியிடும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
பங்களாதேஷ் தலைநகரில் தொழுகைக்கு பின்னர் ஆயிரக்கணக்கானவர்கள் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட அதேவேளை,பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது கொடும்பாவியையும் எரித்தனர்.
பிரான்சின் பொருட்களை புறக்கணிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நாங்கள் முகமது நபியின் போர்வீரர்கள் என கோஷமெழுப்பினர்.இரண்டு பில்லியன் முஸ்லீம்களை பிரான்ஸ் அவமதிக்கின்றது. இதற்காக பிரான்ஸ் மன்னிப்பு கோரவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் வேண்டுகோள் விடுத்தார்.
பிரான்சிற்கு எதிராக பாகிஸ்தானிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதுடன், பொலிஸாரின் மீது கல்வீச்சுக்கள் இடம்பெற்றன.
இஸ்லாமாபாத்தில் 2000க்கும் அதிகமானவர்கள் பிரான்ஸ் தூதரகத்தை நோக்கி செல்வதற்கு முயன்றவேளை பொலிஸார் பாரிய கொள்கலன்களை பயன்படுத்தி அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற போது பொலிஸார் மீது கல்வீச்சு இடம்பெற்றதை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு கண்ணீர் புகை பிரயோகமும் இடம்பெற்றது.
அதேபோல்,ஆப்கானிஸ்தானிலும் சிறிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.