பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ள நிலையில், இம்ரான்கான் அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொள்வதாகவும், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் எம்.க்யூ.எம் கட்சி அறிவித்துள்ளது.
இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கு முன்னரே பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மார்ச் 31 ஆம் திகதி நடக்கவுள்ளதுடன், ஏப்ரல் 3 ஆம் திகதி வாக்கெடுக்கு நடத்தப்படவுள்ளது.
ஆட்சியை தக்கவைக்க பெரும்பான்மைக்கு 172 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில் தற்போது இம்ரான்கானுக்கு 164 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளதால் ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானில் சில வருடங்களாகவே பொருளாதாரம் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. ஒருபக்கம் கடன் சுமை, இன்னொரு பக்கம் பொருளாதார வீழ்ச்சி என அந்த நாடு சிக்கி கொண்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் இம்ரான்கான் பொருளாதாரத்தை மிக மோசமாக கையாண்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பணவீக்கம், விலைவாசி உயர்வு இதையெல்லாம் சரியாக கையாளவில்லை என்று அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த எதிர்க்கட்சியினர் அவரின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளனர்.