November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுக்ரைனில் பின்வாங்கும் ரஷ்யப் படை!

யுக்ரைன் மீது முன்னெடுத்துள்ள போர் ஆரம்பித்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், யுக்ரைனில் சில இடங்களில் ரஷ்யப் படையினர் பின்வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ரஷ்யப் படையினர் கைப்பற்றப்பட்டிருந்த சில இடங்களை யுக்ரைன் படையினர் மீண்டும் கைப்பற்றி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா, யுக்ரைனில் தாக்குதல் தொடங்கிய சில நாட்களில் யுக்ரைனின் சிறிய நகரங்களை கைப்பற்றியது. அதேபோல் தலைநகர் கீவ், புறநகர் பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

வான்வழியில் குண்டுகளை வீசியும், தரைவரையில் அனைத்து பக்கங்களில் இருந்து தாக்குதல்களை நடத்தியும் குறித்த நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது. எனினும் யுக்ரைன் படையினர் தொடர்ந்தும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதனால் ரஷ்ய படையினருக்கு ஏவுகனை மற்றும் விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்த முடியுமாக உள்ளபோதும், தரை வழியில் சென்று நகரங்களை கைப்பற்றுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டுள்ளது.

குறிப்பாப யுக்ரைனின் வடகிழக்கு நகரமான டிரோஸ்டியானெட்ஸை ரஷ்யா தனது படையெடுப்பின் போது முதல் நகராக கைப்பற்றி இருந்தது. அங்கு ரஷ்ய படைகளை எதிர்த்து யுக்ரைன் இராணுவ வீரர்கள் சண்டையிட்டு வந்தனர்.

இந்தநிலையில் டிரோஸ்டியானெட்ஸ் நகரை ரஷ்ய படையிடம் இருந்து மீட்டுள்ளதாக யுக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது. இந்த நகரம் ரஷ்ய எல்லைக்கு அருகே உள்ளது.

இதேவேளை தலைநகர் கீவ்வை சுற்றிவளைத்து தொடர்ந்தும் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்ற போதும், யுக்ரைன் படையின் பதில் தாக்குதல்களால் ரஷ்ய படையினரால் அந்த நகரத்தை நெருங்க முடியாது உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.