January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒரு மாதமாக தொடரும் போர்: யுக்ரைனில் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமானோர் வெளியேறினர்!

ரஷ்யாவின் தாக்குதல்களால் யுக்ரைனில் இருந்து இதுவரையிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுக்ரைன் மீது ரஷ்ய படையினர் தாக்குதல்களை ஆரம்பித்து ஒரு மாதமாகியுள்ளது. நேட்டோ அமைப்பில் யுக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.

வான் வழியாகவும், கடல் மார்க்கமாகவும் உக்ரைன் ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதுடன், தலைநகர் கீவ் உள்ளிட்ட பிரதான நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது.

எனினும் யுக்ரைன் படையினரின் பதில் தாக்குதல்களால், எதிர்பார்த்த இலக்குகளை எட்ட முடியாது ரஷ்யா திணரி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இராணுவ பலத்துடன் ஒப்பிடுகையில் யுக்ரைனை விடவும் ரஷ்யா பல மடங்கு வலிமை வாய்ந்ததாகும். இதனால் யுக்ரைன் மீது அந்நாடு போர் தொடுத்த போது சில நாட்களிலேயே யுக்ரைன் முழுவதையுமே ரஷ்யா கைப்பற்றிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

யுக்ரைன் தலைநகரமான கீவ் நகரை ரஷ்ய இராணுவம் சுற்றி வளைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திய போதிலும் அந்த நகரை இன்னும் முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. இதுவும் ரஷ்யாவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

எனினும் ரஷ்யாவின் தாக்குதல்களால் யுக்ரைனில் பல நகரங்கள் உருக்குலைந்து போயுள்ளன. தலைநகர் கீவ் மற்றும் தெற்கு பகுதியில் உள்ள மரியுபோல் துறைமுகமும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது.

அதே நேரத்தில் 900 பொதுமக்களும் தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை போர் நீடிக்கும் பட்சத்தில் இந்த உயிரிழிப்புகளும், பாதிப்புகளும் மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகின்றது.

இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்ற போதும், அவை தோல்வியிலேயே முடிவடைகின்றன. எனினும் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாக யுக்ரைன் அறிவித்துள்ளது.