January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுக்ரைன் படையினரின் எதிர் தாக்குதலில் திணறும் ரஷ்யப் படை!

யுக்ரைன் மீது தொடர்ந்தும் மூன்றாவது வாரமாகவும் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்ய படையினர், தலைநகர் கீவ் மற்றும் கார்கீவ் நகருக்குள் நுழைய முடியாது திணறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுக்ரைன் மீது படையெடுத்து மூன்று வாரங்கள் கடக்கும் நிலையிலும் ரஷ்ய படையினரால் அந்த நகரங்களை கைப்பற்ற முடியாதுள்ளது.

யுக்ரைன் படையினர் தீவிரமாக எதிர்தாக்குதல்களை நடத்தி வருவதால், ரஷ்ய படையினரால் அந்த நகருக்குள் நுழைவது கடினமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வான் வழியில் தாக்குதல்களை நடத்தி முன்னேறுவதற்கு ரஷ்ய படையினர் முயற்சித்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் கார்கிவ் நகரில் தொடர்ச்சியாக ரஷ்ய போர் விமானங்கள் குண்டுகளை வீசி வருவதாகவும், திங்கட்கிழமை இரவு அந்த நகரத்தின் மீது இரண்டு தடவைகள் மிக சக்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை செவ்வாய்க்கிழமை அதிகாலை தலைநகர் கீவ் மீது 3 சக்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும். அந்த குண்டுகள் வெடித்த சத்தம் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு கேட்டதாகவும் கூறப்படுவதுடன், இதனால் கீவ் நகரின் மையப்பகுதியில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

யுக்ரைனை சில நாட்களுக்குள் ரஷ்யா முழுமையாக கைப்பற்றிவிடும் என்றே முதலில் உலக நாடுகள் எதிர்பார்த்தன. ஆனால் ரஷ்யாவின் போர் திட்டங்கள் குழம்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் ரஷ்ய படையினர் யுக்ரைன் படையினரின் தாக்குதலில் திணறி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.