January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகளை எச்சரிக்கும் ரஷ்யா!

யுக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வரும் நிலையில், அது தொடர்பில் அந்த நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

யுக்ரைனுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் ரஷ்ய இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று, ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்காய் ரியப்கோவ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ரஷ்ய ராணுவத்தின் சட்டப்பூர்வ தாக்குதல் இலக்குகள் என்பதை மேற்கத்திய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யுக்ரைன் மீது இரண்டு வாரங்களுக்கும் மேலாக ரஷ்ய படையினர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன.

இந்நிலையில், யுக்ரைன் – ரஷ்யா இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தை காணாலி மூலம் நடைபெறும் என தலைநகர் கீவ்-லிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே மூன்று தடவைகள் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும், அவை தோல்வியிலேயே முடிவடைந்திருந்த நிலையிலேயே இன்றைய தினம் அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.