யுக்ரைன் மீது இரண்டு வாரங்களுக்குமம் மேலாக கடும் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்ய படையினர் அங்கு போர்க் குற்றங்களில் ஈடுபடுவதாக யுக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மரியுபோல் நகரில் அமைந்துள்ள மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் யுக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
யுக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்ய படையினர், அந்த நகரங்களில் வசிப்போர் வெளியேறும் வகையில் அங்கு தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது.
எனினும் குறித்த நகரங்களில் போர் நிறுத்தத்தை மீறி ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மரியுபோலில் உள்ள மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனை மீதான தாக்குதலில் 17 பேர் படுகாயமடைந்துள்ளதாக யுக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
அங்கு இடிபாடுகளுக்குள் குழந்தைகள், மக்கள் சிக்கியுள்ளனர் என்றும் மீட்புப் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.