யுக்ரைனில் நான்கு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.
தலைநகர் கீவ், கார்கிவ், மரியபோல் மற்றும் சுமி ஆகிய நகரங்களில் இன்று முற்பகல் முதல் போர் நிறுத்தப்படுவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள், மாணவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறும் வகையில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 நாட்களாக யுக்ரைன் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்ய படையினர், அங்கு தலைநகர் கீவ் உள்ளிட்ட பிரதான நகரங்களை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் யுக்ரைன் மீது பலத்த தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகின்றது.
இந்நிலையில் யுக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு மக்கள் வெளியேறினால் மட்டுமே, அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியும் என்ற நிலை இருப்பதால், மக்கள் வெளியேறும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் அதிபர் ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதன்படி குறிப்பிட்ட நகரங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள ரஷ்ய படையினர், அந்த நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு ஏற்றால் போல் பாதைகளை திறந்து வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.