October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”என்னை பார்க்கும் கடைசி தருணமாகக் கூட இருக்கலாம்”: ஜெலன்ஸ்கி

”எனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதுவே நீங்கள் என்னை பார்க்கும் கடைசி தருணமாகக் கூட இருக்கலாம்” என்று யுக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

யுக்ரைனில் ரஷ்ய படையினரின் தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில், அது குறித்து தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும், எங்களுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி உதவ வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி, இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யுக்ரைன் வான் பரப்பை விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு அறிவித்தல் யுக்ரைனுக்குள் நுழையும் போர் விமானங்களை சுட்டு வீழ்த்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வி‌டயத்தில் ஐரோப்பிய நாடுகள் நல்ல முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் யுக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

இவ்வேளையில் தன்னை படுகொலை செய்வதற்காக ரஷ்ய அதிபரினால் சிறப்பு படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் எந்த நேரத்திலும் நான் படுகொலை செய்யப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இதற்காக மாற்றுத்திட்டங்களை ஏற்கனவே தயார் செய்து வைத்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை என்னைக் கொன்றாலும் யுக்ரைனில் ஆட்சி தொடரும் என்றும், அதற்காக மக்கள் துணிந்து போராடுவார்கள் ஏன்றும் அவர் தெரிவித்துள்ளார்.