யுக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் நிலையில், அது தொடர்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், யுக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
யுக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் மற்றும் கிழக்கில் உள்ள வோல்னோவாகா ஆகிய இரண்டு நகரங்களில் மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.
எனினும் அங்கு ரஷ்ய படையினர் போர் நிறுத்த அறிவித்தல்களை மீறி வருவதாக யுக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தலைநகர் கீவில் தொடர்ந்து முன்னேறுவதற்காக தாக்குதலை ரஷ்ய படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், யுக்ரைனின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பிலும் நிதி உதவிகள் தொடர்பிலும் யுக்ரைன் அதிபார் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் பைடனுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை தடுக்கும் வகையில் அதை தடுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று யுக்ரைன் அதிபர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யா மீது கச்சா எண்ணெய் இறக்குமதி தடையை விதிக்கும் கோரிக்கையை வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இது பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உயர்த்தும் என்றும், அது அமெரிக்க நுகர்வோரை பெரியளவில் பாதிக்கும் என்றும் வெள்ளை மாளிகை கருதுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.