யுக்ரைன் மீது 10 நாட்களாக தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யா, அங்கு இரண்டு நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் மற்றும் கிழக்கில் உள்ள வோல் னோவாகா ஆகிய நகரங்களில் இன்று முதல் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த நகரங்களில் சிக்கியுள்ளவர்கள் வெளியேற வசதியாக இவ்வாறு போர் நிறுத்தத்தை அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ அமைப்பில் யுக்ரைன் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய ரஷ்யா, பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் யுக்ரைன் மீது தாக்குதல்களை நடத்தியதுடன், அங்கு பிரதான நகரங்களை கைப்பற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது.
இதன்போது யுக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வந்தது.
இதனால் அங்கு பெருமளவான கட்டடங்கள் அழிவடைந்துள்ளதுடன், பல இலட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.