January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Update: யுக்ரைன் எல்லையில் அணு ஆயுதங்களை குவிக்கும் ரஷ்யா!

யுக்ரைன் மீது 8 ஆவது நாளாக தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்ய படையினர், தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கீவ் மற்றும் கார்கீவ் நகரங்களின் மீது மீது ஏவுகணை மற்றும் பீரங்கிகள் ஊடாக தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன் விமானங்களில் இருந்து குண்டுகளும் வீசப்படுகின்றன.

இந்நிலையில் கீவ் நகரில் புதன்கிழமை இரவு 4 பெரிய குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரவு முழுவதும் அந்த நகரில் வெடிப்பு சத்தங்கள் தொடர்ந்தும் கேட்டதாக அங்கிருப்போர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை தலைநகர் மீதான ஏவுகனை தாக்குதல்களை தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் செயற்பட்டு இடைமறித்து தடுத்து வருவதாக யுக்ரைன் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

எல்லையில் அணு ஆயுதங்களை குவிக்கும் ரஷ்யா

யுக்ரைனுக்கு அதன் நட்பு நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கும் நிலையில், அது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா, தற்போது தமது எல்லையில் அணு ஆயுதங்கள குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி ரஷ்யாவிடம் உள்ள 5977 அணு ஆயுதங்களில் 1588 ஆயுதங்கள் யுக்ரைன் எல்லைகளில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை வான்வெளி தாக்குதல்களை நடத்தக் கூடிய 34 போர்விமானங்களையும் ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று கடல் வழி தாக்குதல் நடத்த போர் கப்பல்களும், அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் நீர் மூழ்கி கப்பல்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அணு ஆயுதங்கள் கொண்டு ரஷ்யா மீது தாக்குதல்கள் நடத்தப்படுமாக இருந்தாக அவை வெடிக்கும் பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் சுற்று வட்டப் பகுதி அழிவடையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இணங்கும் யுக்ரைன்

ரஷ்யாவின் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் யுக்ரைன், அது தொடர்பில் ரஷ்யாவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட இணக்கம் வெளியிட்டுள்ளது. .

போலந்தின் எல்லையில் இருக்கும் பெலாரஸின் பிரெஸ்ட் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தூதுக்குழுவினர் வியாழக்கிழமை செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக போரை நிறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்த நிலையிலேயே மீண்டும் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

10 இலட்சம் பேர் இடம்பெயர்வு

யுக்ரைனில் ரஷ்யா படையினர் நடத்தி வரும் தாக்குதல்களை தொடர்ந்து அங்கிருந்து ஒருவார காலப்பகுதியில் 10 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளின் ஊடாக அவர்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய படையினரின் தாக்குதல்கள் தொடருமாக இருந்தால் இந்த எண்ணிக்கை 40 இலட்சத்தை தாண்டலாம் என்றும் ஐநா குறிப்பிட்டுள்ளது.