யுக்ரைன் மீதான போர் தொடரும் என்றும், அதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவை பாதுகாக்கவே நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும், தமது இலக்குகளை அடையும் வரையில் போரை முன்னெடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பில் தொடர்ந்தும் ரஷ்யாவுடன் பேசுவதற்கு தயாராகவே இருக்கின்றோம் என்று யுக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
பெலாரஸில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாத நிலையில், இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
எனினும் யுக்ரைன் மீதான தாக்குதல்களை தொடர்ந்துள்ள ரஷ்யா, அங்கு கனரக ஆயுத, தளவாடங்களை குவித்து வருகின்றது.
இதேவேளை ரஷ்ய படைக்கு ஆதரவாக பெலாரஸ் இராணுவம் யுக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.