யுக்ரைனில் 6 ஆவது நாளாகவும் தாக்குதல்களை தொடரும் ரஷ்ய படையினர், தலைநகர் கீவ்வை நோக்கி பெரும் ஆயுதங்களுடன் முன்னேறி வருவதால் அங்கு பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இராணுவ வாகனங்கள், பீரங்கிகள், தளவாடங்கள் ஆகியவற்றுடன் ரஷ்ய படையினர் 64 கிலோ மீட்டருக்கு அணிவகுத்து தலைநகரை நோக்கி செல்லும் செய்மதி படங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இதேவேளை யுக்ரைனை சுற்றி வளைக்கும் நோக்கில் அனைத்து திசைகளில் இருந்தும் படைகள் முன்னேறி வருகின்றன என்றும் கூறப்படுகின்றது.
தற்போது தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் ஆகியவற்றில் ரஷ்ய மற்றும் யுக்ரைன் படையினருக்கும் இடையே கடும் சண்டை இடம்பெற்று வருவதாகவும், அங்கு ரஷ்யா ஏவுகணை மற்றும் குண்டுகள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கட்டிடங்கள் பல தரைமட்டமாகியுள்ளதுடன், பல கட்டடங்களில் தீ ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் யுக்ரைனில் இருந்து இதுவரையில் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
அங்கு போர் தீவிரமடையும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் ஐநா குறிப்பிட்டுள்ளது.
யுக்ரைனில் இருந்து வெளியேறுவோர், போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளில் எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையில், போர் நிறுத்தம் தொடர்பில் யுக்ரைன் – ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையே நேற்று பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாது முடிவடைந்துள்ளன.
போரை உடனடியாக நிறுத்திவிட்டு இராணுவத்தை வெளியேற்றும்படி ரஷ்ய தரப்புக்கு யுக்ரைன் கோரிக்கை விடுத்தது.
ஆனால் பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. எனினும் அடுத்து வரும் நாட்களில் பேச்சு வார்த்தையை தொடர இரு தரப்பும் ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை போலாந்து – பெலாரஸ் எல்லையில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.