January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“போர் நிறுத்தமே அவசியம்”: பேச்சுவார்தையில் யுக்ரைன் வலியுறுத்தல்!

போர் நிறுத்தமே அவசியம் என்றும், ரஷ்யப் படைகள் உடனடியாக தமது நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது யுக்ரைனால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
யுக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்தும் 5 ஆவது நாளாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள யுக்ரைன் படைகள், ரஷ்யாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலைமையில், இழப்புகளை தவிர்ப்பதற்காக இரு நாடுகளும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின.

இதன்படி இரண்டு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்ததையடுத்து பெலாரசின் கோமல் பகுதியில் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த பேச்சுவார்த்தையின் போது, இதுவரை நடந்துள்ள போரில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதால் போர் நிறுத்தமே தேவை என்றும், ரஷ்யப் படைகள் வெளியேற வேண்டும் என யுக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, இருநாடுகளிடையே ஒப்பந்தம் செய்வது அவசியம் எனவும், அதற்கு யுக்ரைன் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ரஷ்யா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.