January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தயார் நிலையில் ரஷ்யாவின் அணுவாயுதங்கள்!

யுக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், அடுத்து வரும் மணித்தியாலங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று யுக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஐந்தாவது நாளாக யுக்ரைன் மீது மும்முனைத் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்ய படையினர் அங்கு தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

எனினும் கீவ் நகரை கைப்பற்ற விடாது யுக்ரைன் படையினர், ரஷ்ய படையினர் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் யுக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் சில ஆயுதங்களை வழங்க தீர்மானித்துள்ள நிலையில், அதற்கு ரஷ்ய அதிபர் புட்டின் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், தமது நாட்டிலுள்ள ஆணுவாயுத நடவடிக்கை பிரிவை தயார் நிலையில் இருக்குமாறு அறிவித்துள்ளார்.

புட்டினின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை பெரும் அச்சத்திற்குள் கொண்டு சென்றுள்ளது.

இவ்வாறான நிலைமையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக யுக்ரைனுக்குள் படைகளை அனுப்ப அண்டை நாடான பெலாரூஸ் தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினத்திற்குள் அந்தப் படைகள் யுக்ரைனுக்குள் நுழையலாம் என்று கூறப்படுகின்றது. எனினும் இதனை பெலாரூஸ் உறுதிப்படுத்தவில்லை.

இதேவேளை யுக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியைத் தொடங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தின் வான் பரப்பைப் பயன்படுத்த ரஷ்யாவுக்குத் தடை விதிப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில், பிரிட்டன் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய யுக்ரைன் அதிபர், நாடு முழுவதும் சண்டை நடந்து வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரம் யுக்ரேனுக்கு மிக முக்கியமான காலகட்டமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.