யுக்ரைன் – ரஷ்யா பதற்றங்களுக்கு மத்தியில் வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது.
இந்த வருடத்தின் 8 ஆவது ஏவுகனை சோதனையை வடகொரியா ஞாயிற்றுக்கிழமை காலையில் நடத்தியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வட கொரியா, ஆபத்தான அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதன் விளைவாக வடகொரியா, கடந்த பல மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்த நெருக்கடி நிலைமையிலும் வடகொரிய அதிபர் கிம் யொங் உன், ஏவுகணை சோதனையை தொடர்ந்தும் நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது.
யுக்ரைன் – ரஷ்யா பதற்றத்தின் பக்கம் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ள நிலையில், வடகொரியா ஏவுகணை சோதனை உள்ளிட்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தென்கொரியா அதிபர் கடந்த வாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இவ்வாறான நிலைமையில் வடகொரியா தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகிலுள்ள சுனானில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஏவுகணையை கடல் பகுதிக்கு அனுப்பி சோதனை நடத்தப்பட்டுள்ளது.