January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மோசமடையும் யுக்ரைன் நிலவரம்: இந்தியாவிடம் உதவி கோரும் ஜெலன்ஸ்கி!

யுக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அங்கு நிலைமை மோசமடைந்து வருகின்றது.

தற்போது தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்ய படைகள் முற்றுகையிட்டு கடும் தாக்குதல் நடத்தி வருவதால் யுக்ரைன் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் மத்தியில் பதற்றமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.

கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளையும் ரஷ்ய படைகள் தாக்குவதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும் தங்களை தற்காத்துக் கொள்ள, யுக்ரைன் படையினர் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் யுக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தனது மாளிகையை விட்டு வெளியேறி இரகசிய இடமொன்றில் பதுங்கி இருப்பதாகவும், அவர் அங்கிருந்தவாறு பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தமது படையினர் ரஷ்ய படையினரின் விமானங்கள் பலவற்றை வீழ்த்தியுள்ளதாக யுக்ரைன் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், யுக்ரைன் அதிபர், இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் யுக்ரைன் நிலவரத்தை எடுத்துக்கூறி அரசியல் ஆதரவு கேட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது, அமைதியான முறையில் நிலைமையை கொண்டு செல்ல இந்தியாவின் பங்களிப்பு எப்போதும் இருக்கும் என்று மோடி வாக்குறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக யுக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.