January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுக்ரைன் மீது தொடரும் தாக்குதல்: ஐநாவில் கண்டனத் தீர்மானத்தை தோற்கடித்தது ரஷ்யா!

யுக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

தற்போது தலைநகர் கீவை கைப்பற்றும் நடவடிக்கையில் ரஷ்ய படையினர் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முக்கிய கட்டங்களை கைப்பற்றியுள்ள ரஷ்ய படையினர் அங்கு தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் கீவ் நகர வீதிகளில் இரு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டைகள் நடந்ததாக கூறப்படுகின்றது.

இதேவேளை தான் யுக்ரைனை விட்டு எங்கும் செல்லவில்லை என்றும், தமது படையினருடன் தான் ரஷ்ய படைகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் யுக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா தோற்கடித்துள்ளது.

ரஷ்யா உடனடியாக நிபந்தனையின்றி யுக்ரைன் எல்லையில் இருந்தும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருந்தும் அனைத்து இராணுவப் படைகளையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானம் மீது அமெரிக்கா, போலந்து, இத்தாலி, ஜெர்மனி, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவுடன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. எனினும் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா தீர்மானத்தை முறியடித்தது.