January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுக்ரைனில் பொதுமக்கள் பலர் பலி: தனித்து விடப்பட்டுள்ளோம் என்கிறார் ஜெலன்ஸ்கி!

யுக்ரைன் மீது ரஷ்ய படையினர் தொடர்ந்தும் இரண்டாவது நாளாகவும் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

யுக்ரைனில் முக்கிய நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்யா, தற்போது மிலிடோபோல் நகரை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவின் முதல்நாள் தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 137 பேர் உயிரிழந்துள்ளதுடன், 316 பேர் படு காயமடைந்துள்ளனர் என்று யுக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தாம் யுக்ரைனின் இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்ய படையினர் தெரிவித்துள்ளனர். இதன்படி முதல்நாள் தாக்குதலில் மத்திய கீவில் அமைந்துள்ள யுக்ரைனின் இராணுவ உளவுப்பிரிவு அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ நிலைகளை தாக்குவதாக ரஷ்யா கூறினாலும் அங்கு பொதுமக்கள் கொல்லப்படுவதாக யுக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என யுக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ரஷ்ய படைகளிடமிருந்து இருந்து நாட்டைப் பாதுகாக்க அனைத்துத் தரப்பு மக்களும் முன்வர வேண்டும். ரஷ்ய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.