January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம்!

யுக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

யுக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த லுகன்ஸ்க் மற்றும் டன்ட்ஸ்க் ஆகிய 2 மாகாணங்களை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக ரஷ்ய அதிபர் நேற்று அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அங்கு ரஷ்ய படைகள் நுழைவதற்கு உத்தரவிட்டதால் அங்கு போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், யுக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் நுழைய உத்தரவிட்ட அதிபர் விளாடிமிர் புட்டினின் நடவடிக்கைகளுக்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான், அவுஸ்திரேலியா, தென்கொரியா, நியூசிலாந்து, துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் ரஷ்யாவுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிப்பதற்கும் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையயில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து ஜெர்மனியின் லப்மின் வரை பால்டிக் கடலுக்கு கீழே 1,200 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள ஐரோப்பாவுக்கு எரிவாயுவை கொண்டு செல்லும் ‘நார்டு ஸ்ட்ரீம்’ திட்டத்துக்கு வழங்கிய ஒப்புதலை ஜெர்மனி நிறுத்தத் தீர்மானித்துள்ளது.