யுக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ், லுகன்ஸ் பிராந்தியங்களை தனித் தனி நாடுகளாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார்.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய நாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் ரஷ்யப் படைகள் ஈடுபடும் என்றும் ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.
இதன்படி ரஷ்ய படைக்கு யுக்ரைனுக்குள் நுழைவதற்கான அனுமதியை புட்டின் வழங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து யுக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இதேவேளை இது தொடர்பில் தொலைக்காட்சியில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் புட்டின், யுக்ரைன் எப்போதும் தனி நாடாக இருக்கவில்லை என்றும், அது அமெரிக்காவின் காலனியாகவே இருந்து வந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
நேட்டோ அமைப்பில் யுக்ரைன் இணைவது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையானது அமைதி பேச்சுவார்த்தையை முறியடிக்கும் நடவடிக்கை என்று யுக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஷ்ய அதிபரின் இந்த அறிவிப்பை கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், யுக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற பகுதிகளில் பொருளாதார தடைகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். .