January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுக்ரைன் எல்லையில் பின்வாங்கும் ரஷ்ய படையினர்!

யுக்ரைன் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமது இராணுவ வீரர்கள் முகாமிற்கு திரும்பி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

யுக்ரைன் எல்லையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரை ரஷ்யா குவித்தை தொடர்ந்து போர்ப் பதற்ற நிலைமை உருவாகியது. இதன்படி எவ்வேளையிலும் யுக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்து வந்தது.

எனினும் தம் மீதான குற்றச்சாட்டை மறுத்துவந்த ரஷ்யா, பயிற்சியிலேயே தமது இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக கூறிவந்தது.

இந்நிலையில் யுக்ரைன் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் சிலர் முன்னர் இருந்த முகாமிற்கு திரும்புவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இராணுவ வீரர்கள் அங்கிருந்து யுத்த வாகனங்களுடன் திரும்பிச் செல்லும் புகைப்படங்கள் ரஷ்ய பாதுகாப்பு தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் ஆனால் இராணுவத்தினர் எந்த பகுதியிலிருந்து பின்வாங்குகிறார்கள், அவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் எல்லைகளில் படைகள் குறைக்கப்படுவதாக ரஷ்யா கூறுவதை நம்ப முடியாது என்றும், அதனை தாம் நேரில் பார்த்தால் மட்டுமே நம்புவோம் என்றும் யுக்ரைன் தெரிவித்துள்ளது.

இதேவேளை யுக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இரண்டு வங்கிகளின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ரஷ்யாவை சேர்ந்த குழுவொன்றே இதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.