கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக கனடாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ள பிரதமர் ஜஸ்டின் டுருடோ, இந்தக் காலப்பகுதியில் பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரத்தையும் வழங்கியுள்ளார்.
இதன்படி 50 ஆண்டுகளுக்கு பின்னர் கனடாவில் பிறப்பிக்கப்படும் அவசர நிலை இதுவாகும்.
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் கொள்கலன் லொரி சாரதிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று கனடா அரசு அறிவித்திருந்த நிலையில் அதற்கு எதிராக அந்த வாகனங்களின் சாரதிகள் கனடா-அமெரிக்காவை இணைக்கும் முக்கியமான வணிகப் பாதையான விண்ட்சரில் உள்ள தி அம்பாசிடர் பாலத்தில் முற்றுகை போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இவர்களின் போராட்டம் நீதிமன்ற உத்தரவையும் மீறி தொடர்ந்தும் நடைபெற்று வந்ததுடன், இந்தப் போராட்டத்திற்கு பொதுமக்களின் ஆதரவும் கிடைத்திருந்தது. இதனால் கனடா – அமெரிக்கா இடையேயான போக்குவரத்து தடைபட்டது..
இந்நிலையில், போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால் கனடாவில் அவசர நிலையை பிறப்பிக்க பிரதமர் ஜஸ்டின் டுருடோ நாட்டில் அவசர நிலையை பிறப்பித்துள்ளார். இதற்கு முன்னதாக 1980ஆம் ஆண்டளவில் கனடாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதற்கு பின்னர் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டங்களில் ஈடுபடுவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.